Oct 2, 2026
Thisaigal NewsYouTube

சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது: வீட்டில் அதிரடிச் சோதனையில் எஸ்பிஆர்எம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது: வீட்டில் அதிரடிச் சோதனையில் எஸ்பிஆர்எம்

பூச்சோங், நவம்பர்.28-

லஞ்ச ஊழல் தொடர்பில் சில காணொளிகளை வெளியிட்டு, பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்டுள்ளார்.

பூச்சோங்கில் உள்ள ஆல்பெர்ட் தே வீட்டிற்குள் இன்று காலையில் நுழைந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்ெம் அதிகாரிகள், அந்த வர்த்தகரைக் கைது செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் ஸையிட் மாலேக் தெரிவித்தார்.

வழக்கறிஞர் ஸையிட் மாலேக் வெளியிட்ட காணொளி தகவல்படி, வர்த்தகர் ஆல்பெர்ட் தேயின் வீட்டிற்குள் நுழைந்த எஸ்பிஆர்எம் அதிகாரிகள், அவரைப் பலவந்தமாகக் கைது செய்து, ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டுச் சென்றதாகவும், சுமார் ஒரு நிமிடம் கழித்து, அதே வாகனம், ஆல்பெர்ட் தேயின் வீட்டிற்குத் திரும்பி வந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் காணப்பட்ட ஆல்பெர்ட் தே, வாகனத்திலிருந்து இறக்கப்பட்டு, அவரின் வீட்டிற்கு மீண்டும் கொண்டுச் செல்லப்பட்டார். பின்னர் வீட்டிற்குள் அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் ஸையிட் மாலேக் குறிப்பிட்டார்.

தனது கட்சிக்காரரான ஆல்பெர்ட் தேயைச் சந்திப்பதற்குத் தாம் முயற்சித்த போது எஸ்பிஆர்எம் அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டனர் என்றும், இந்தக் காட்சிகள் அனைத்தும், ஆல்பெர்ட் தேயின் வீட்டின் முன் காரில் அமர்ந்தவாறு தாம் நேரில் கண்டதாக அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆல்பெர்ட் தேயின் மற்றொரு வழக்கறிஞர் மஹாஜோத் சிங் கூறுகையில் அந்த வர்த்தகரைக் கைது செய்வதற்கும், அவரின் வீட்டைச் சோதனைச் செய்வதற்கும் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் நீதிமன்ற கைது ஆணையைப் பெற்று இருக்கக்கூடும் என்றார்.

சபா ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள் பெரும் ஊழலைப் புரிந்ததாகக் கடுமையாகக் குற்றஞ்சாட்டி, ஆல்பெர்ட் தே வெளியிட்ட காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில் ஒரு குத்தகை தொடர்பில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் அரசியல் மூத்த செயலாளர் டத்தோ ஶ்ரீ ஷ்ம்சுல் இஸ்கண்டார் முகமட் அகினுக்கு 6 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட்டைத் தாம் லஞ்சமாகக் கொடுத்ததாக ஆல்பெர்ட் தே பகிரங்கமாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →