ஈப்போ, ஜனவரி.22-
ஈப்போ, ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் நேற்று புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில், போலீஸ் கார்ப்பரல் ஒருவருக்கு மரணத்தை விளைவித்ததாகச் சந்தேகத்தின் பேரில் 80 வயதுடைய மூதாட்டி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான அந்த மூதாட்டி விபத்து நடந்த அன்றே ஈப்போ மாவட்ட போலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அந்த மூதாட்டி போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்த போது அவர் உட்கொள்ளவில்லையென முடிவு எதிர்மறையாக வந்துள்ளது என்று ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் 33 வயது போலீஸ்காரர் முஹமட் ஹாஃபிஸான் ஒத்மான் என்பவர் உயிரிழந்தார். பிற்பகல் 3.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தனது பணிக்குச் செல்லும் வழியில் ஒரு கார் மோதியதில் அவர் மரணமுற்றார்.
லேங்கோக் ஹரிமாவ் பகுதியிலிருந்து வந்த கார் ஓட்டுநர், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவிற்குள் தவறுதலாக வலதுபுறம் திரும்பிய போது மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகக் கூறப்படுகிறது.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதற்காக அந்த மூதாட்டி போக்குவரத்துச் சட்டம் 41 ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று ஏசிபி அபாங் ஸைனால் தெரிவித்தார்.








