கோலாலம்பூர், செப்டம்பர்.10-
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி, டிக் டாக் பிரைவெட் லிமிடட், டெலிகிராம் மெசஞ்சர் இன்கோர்ப்பரேட்டட் மற்றும் வீ சாட் இண்டர்நேஷனல் பிரைவெட் லிமிடட் ஆகிய மூன்று இணையத் தகவல் பரிமாற்றச் சேவைகள் மற்றும் சமூக ஊடக வழங்குநர்கள், மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-இன் கீழ் உரிமம் பெற்றுள்ளனர்.
அதே வேளையில், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் செயலிகளின் நிறுவனமான மெத்தாவுடனும், யூடியூப்பை
இயக்கும் கூகுள் நிறுவனத்துடனும், உரிமம் குறித்து தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான, பொறுப்புமிக்க இணையச் சேவைகளை உருவாக்கும் வகையில், இம்முயற்சியை புத்ராஜெயா மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மலேசியாவில் உரிமம் பெற 8 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்ற வரம்பைத் தாங்கள் எட்டவில்லை என்று எக்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாகவும் ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.








