May 5, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் தொல்லை: வைரலான கிராப் ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

பாலியல் தொல்லை: வைரலான கிராப் ஓட்டுநர் கைது

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.05-

அண்மையில் வியட்நாம் நாட்டுப் பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் இ-ஹெய்லிங் ஓட்டுநரை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹமான் அர்சாட், இது குறித்து கூறுகையில், 26 வயதான உள்ளூர் ஆடவர் நேற்று ஜோகூர் பாருவில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த அதே நாளில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபரிடமிருந்து இரண்டு கைபேசிகள் மற்றும் ஒரு Perodua Bezza கார் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜோகூர் பாரு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த நபரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட பெண்ணின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் நடந்து கொண்டதாக அந்த வாகன ஓட்டுநர், குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோவில், இந்த ஓட்டுநர் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணைத் தொடுவதற்குக் கையை நீட்டுவதும், அந்தப் பெண் அதனைத் தட்டி விடுவதும் பதிவாகியுள்ளது. மேலும், மாண்டரின் மொழியில் அந்தப் பெண்ணின் வயது மற்றும் அவரது 'விலை' என்ன என்றும் அவர் கேட்பது அந்த வீடியோவில் கேட்கிறது. இந்தச் சம்பவத்திற்கு கிராப் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணைத் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

Related News