ஷா ஆலாம், டிசம்பர்.31-
மலேசியாவில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கவலைக்கிடமான அளவில் குறைவாக உள்ள நிலையில், மக்களின் உயிரைக் காக்க சிலாங்கூர் மாநில அரசு இப்போது ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் புரட்சியை கையில் எடுத்துள்ளது. "பதிவு செய்வது மட்டும் போதாது, தானம் செய்பவரின் இறுதி ஆசையை குடும்பத்தினர் மதிக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தும் வகையில், மாநில அரசு புதிய அதிரடி பரப்புரைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் அறிவித்துள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் நம்மிடம் இருந்தும், உறுப்புகள் கிடைக்காமல் பல நோயாளிகள் தவிப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ள நிபுணர்கள், சவுதி அரேபியா போன்ற நாடுகளை விட மலேசியா இதில் மிகவும் பின்தங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தத் திட்டம் வெறும் விளம்பரம் மட்டுமல்லாமல், சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுத்து, ஒவ்வொரு குடும்பத்திலும் இது குறித்த ஆரோக்கியமான விவாதத்தைத் தொடங்கி, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் ஒரு மாபெரும் இலக்கைக் கொண்டுள்ளது என ஜமாலியா மேலும் கூறினார்.








