நாட்டின் மிக பழமை வாய்ந்த உயர்கல்விக்கூடமான மலாயா பல்கலைக்கழகம், உலகளாவிய தர வரிசை குறியீட்டில் முதல் 10 இடங்களில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்பபல்கலைக்கழத்தின் கல்வித் திட்டங்கள் மற்றும் விரிவுரியாளர்களின் தரத்தை உயர்த்துமாறு கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முதல் நிலையில் உள்ள பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதைக் காட்டிலும் தரமான விரிவுரையாளர்களை தேர்வு செய்வதிலும், தனது கல்வித் திட்டங்களை மேம்படுத்திக்கொள்வதிலும் மலாயா பல்கலைக்கழகம் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்று மலேசிய கல்வி இயக்கத்தின் முன்னாள் செயலாளர் ரொஸ்லி மஹாட் கேட்டுக்கொண்டார்.
மலேசிய பல்கலைக்கழகங்கள் நெறிமுறையற்ற ஆய்வியல் நடவடிக்கைகளிலும், தர வரிசையை உயர்த்துவதிலும் அதிக நேரத்தையும், வளத்தையும் செலவிடுகின்றன. ஆனால், காலுக்கு அடியில் இருக்கின்ற விரிவுரையாளர்களின் தரத்தையும், கல்வித் திட்டங்களையும் உயர்த்துவதிலும் அதிக கவனம் செலுத்துவது கிடையாது என்று ரொஸ்லி மஹாட் குற்றஞ்சாட்டினார்.








