பேராக், சுங்கை சிப்புட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள எல்பில் மற்றும் ஈவுட் தோட்டங்களைச் சேர்ந்த 47 தொழிலாளர்களின் வீட்டு உரிமைப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் உறுதியளித்துள்ளார்.
இதற்காக, சைம் டார்பி நிறுவனம் தனக்குச் சொந்தமான 4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளது. 2018-இல் திட்டமிடப்பட்டு, கோவிட் மற்றும் அரசியல் மாற்றங்களால் முடங்கிய இத்திட்டத்தை, இனி பேராக் மாநில அரசே முழுப் பொறுப்பேற்று நடத்தும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட தோட்ட மக்களின் என்யுபிடப்ளியூ பிரதிநிதிகள், சைம்டார்பி பொறுப்பாளர்கள் ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டத்தோ சிவநேசன் இதனை தெரிவித்தார்.
ஆர்.பி.டி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால், தனியார் மேம்பாட்டாளர்களுடன் இணைந்து, அடிப்படை வசதிகளுடன் கூடிய குறைந்த விலை வீடுகளைக் கட்டித்தர அரசு பரிசீலித்து வருகிறது என்று டத்தோ சிவநேசன் விவரித்தார்.
சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனத்துடன் பேச்சுவார்ததை நடத்தி 10 ஏக்கர் நிலத்தை பெற்றுத் தருவதற்கு பெறும் முயற்சி மேற்கொண்ட டத்தோ சிவநேசனுக்கு கேம்ரி தோட்டத்தை சேர்ந்த சந்துரு செல்வராஜு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இத்திட்டத்தின் மூலம் சாலை, வடிகால், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, 47 குடும்பங்களுக்கும் நல்லதொரு வீட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










