ஈப்போ, ஆகஸ்ட்.26-
மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் கொமுட்டர் ரயில் மோதி ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று காலை 6 மணியளவில் பேரா, செம்மோர், கோயில் ஒன்றின் அருகில் 156 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
ரயிலின் முன்புறம் திடீரென்று பெரிய சத்தம் கேட்டதை அதன் ஓட்டுநர் உணர்ந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
அந்த ரயில் ஈப்போவிலிருந்து வடக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்த காரிருளில் ரயில் மீது மோதிய பொருளை ஓட்டுநர் பார்க்கவில்லை என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏசிபி அபாங் ஸைனால் குறிப்பிட்டார்.
ரயில் இருப்புப் பாதையில் சிதறிய ஆடவரின் உடல் அவயங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. இதனைத் திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.








