கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-
அரசாங்கத்தின் உதவித் திட்டங்களில் இந்திய சமுதாயம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வன்மையாக மறுத்துள்ளார்.
அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பிரதமர் விளக்கினார். இந்தியச் சமுதாயத்தின் உதவித் திட்டங்களில் அரசாங்கம் தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியச் சமுதாயத்திற்கு வழங்கப்படக்கூடிய உதவிகள் மற்றும் இதர அனுகூலங்கள் முழுக்க முழுக்க இந்திய சமூகவியல் உருமாற்றுப் பிரிவான மித்ராவை மட்டும் சார்ந்து இருக்கவில்லை. மாறாக, இதர அமைச்சுகள் வாயிலாகவும், அரசாங்க ஏஜென்சிகள் மூலமாகவும் விரிவான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
மித்ராவிற்கு வழங்கப்பட்டு வரும் குறிப்பிட்ட வருடாந்திர மானிய ஒதுக்கீட்டான 100 மில்லியன் ரிங்கிட்டுக்கு அப்பாற்பட்ட நிலையில், இந்தியர்கள் சார்ந்துள்ள கல்வி, வீடமைப்பு மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் இந்தியச் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு அமைச்சுக்களின் வாயிலாக, கணிசமான நிதி ஒதுக்கீடுகளுடன் கூடிய பிற திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.
உதாரணத்திற்கு இந்தியச் சமூகத்திற்கான சும்பாங்கான் தூனாய் ரஹ்மா எனப்படும் எஸ்டிஆர் ரொக்க உதவித் திட்டத்தின் மொத்த நிதி ஒதுக்கீடு 2022 ஆம் ஆண்டில் அரை பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. அதே நேரத்தில் 2025 ஆம் ஆண்டில் அது ஒரு பில்லியன் ரிங்கிட்டாக எட்டியுள்ளது என்று பிரதமர் கூறினார்.
தவிர, கூடுதலாக, 1.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வீட்டு வசதி கடன் உத்தரவாதத் திட்டம் இந்தியச் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், மித்ராவுக்கான 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில், 98.9 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 82 பேர் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியச் சமுதாயத்திற்கான பிற உதவிகளில் ஆரம்பக் கல்வி மானியங்களாக 93 மில்லியன் ரிங்கிட், இந்திய சமூதாயத்தின் B40 குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கு உதவியாக 17.63 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளிகளுக்கு 2.99 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒட்டுமொத்த நிலையில் கட்டம் கட்டமாக 6 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.
எனவே இந்த உதவித் திட்டங்களைப் பார்க்கும் போது, அரசாங்கம் உண்மையிலேயே இந்தியச் சமூகத்தைப் புறக்கணிக்கிறதா? என்று பிரதமர் வினவினார்.
தவிர, மித்ராவின் ஒதுக்கீடுகள் உடனடியாக அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறப்படும் கூற்றும் உண்மையல்ல என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பிரதமர் விளக்கம் அளித்தார்.
முன்னதாக, பக்காத்தான் ஹராப்பானின் சுங்கை சிப்புட் எம்.பி. எஸ். கேசவன், இந்தியர்களின் சமூகவியல் -பொருளாதார நிலைகளை விரிவாக மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் மித்ரா அல்லது பிற அரசாங்க ஏஜென்சிகள் மூலம் மடானி அரசாங்கம் பிரத்தியேகமாக கவனம் செலுத்துகிறதா? என்று எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார்.
இந்தியச் சமுதாயத்திற்கான அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் குறித்து மேலும் விவரித்த டத்தோ ஶ்ரீ அன்வார், 2025 ஆம் ஆண்டில், ஒவ்வோர் அமைச்சிலும் மித்ராவையும் உள்ளடக்கிய சிறந்த ஒருங்கிணைப்புடன், இந்திய சமூகத்திற்கு உதவிகள் வழங்குவதில் அரசாங்கம் மாறுபட்ட அணுகுமுறையை எடுத்து வருவதாகக் கூறினார்.
உதாரணமாக, வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் இந்தியச் சமூகத்திற்கான வீடமைப்புத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட மித்ராவிடமிருந்து கூடுதல் நிதி பெறப்பட்டு ஒருங்கிணைக்கப்படுவதாக பிரதமர் விளக்கினார்.
வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சில், இந்தியச் சமுதாயம் சம்பந்தப்பட்ட வீடமைப்புத் திட்டத்திற்கு 20 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டால், கூடுதலாக 5 மில்லியன் ரிங்கிட், மித்ரா நிதியிலிருந்து பெறப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
தவிர 50 தமிழ்ப்பள்ளிகளில் உள்ள ஐசிடி எனப்படும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகங்களில் உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கல்வி அமைச்சிலிருந்து 5 மில்லியன் ரிங்கிட் பெறப்படுகிறது. அந்த நிதியின் ஒரு பகுதி மித்ராவிடமிருந்து பெறப்படுவதாக பிரதமர் விளக்கினார்.
நாடு முழுவதும் உள்ளூர் சமூக மையங்களாகப் பதிவுச் செய்யப்பட்ட மொத்தம் 200 இந்து வழிபாட்டுத் தலங்கள் அல்லது இந்து கோயில்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் சிறிய பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பிற்காக பிரதமர் துறையின் இசியு ஜேபிஎம் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவிலிருந்து ஒரு முறை வழங்கக்கூடிய 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என பிரதமர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்தியர்களின் ஏழ்மை நிலையை அகற்ற 13 ஆவது மலேசித் திட்டத்தின் கீழ் அரசாங்கம் எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகைகளை மேற்கொண்டுள்ளது என்று கிள்ளான் எம்.பி. வீ. கணபதிராவ் எழுப்பிய கேள்விக்கும் பிரதமர் பதில் அளித்தார்.
இந்தியச் சமூகத்தினரிடையே நிலவும் கடுமையான வறுமை நிலைப் பிரச்சினையை முற்றாக துடைத்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டு, உதவித் திட்டங்களை மையப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது வலுப்படுத்தப்பட்டு, அவற்றில் இந்தியச் சமுதாயத்தின் பங்கேற்பை உறுதிச் செய்வதற்கு விரிவான கட்டமைப்புகளைக் கொண்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
மடானி பொருளாதாரக் கட்டமைப்பானது, இன வேறுபாடு இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திலும் கடுமையான வறுமை நிலை முழுமையாக துடைத்தொழிக்கப்படுவதற்கு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலாய்க்காரர்களிடையே ஏழைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஏனெனில், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மலாய்க்காரர்கள். எனவே, உதவி திட்டங்கள் மலாய் சமூகத்திற்கு இயற்கையாகவே மிக அதிகம் என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை, மலாய்க்காரர்களுடன் ஒப்பிடும் போது மக்கள் தொகை குறைவாகவும், ஏழைகளின் எண்ணிக்கை குறைவாகவும் இருந்தாலும், இந்தியச் சமூகத்தில் வறுமையில் உழன்று கொண்டிருக்கின்றவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளது.
அத்தகைய இந்தியர்களை இலக்காகக் கொண்டு எந்ததெந்த ரூபத்தில் அவர்களை வறுமைப் பிடியிலிருந்து மீட்டு கரைச் சேர்க்க முடியும் என்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக இருந்து வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.








