குவா மூசாங், நவம்பர்.28-
கிளந்தான், குவா மூசாங், போ ஹாவ், கம்போங் தாப்பாயைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், போஸ் பாலாருக்குச் செல்லும் பிரதான போக்குவரத்துச் சாலைத் தொடர்பை இழந்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பிரதான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது.
Four Wheel Drive வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்த பூர்வக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பிரதானப் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளதாக கிராமத் தலைவர் ஹனான் அஞ்சாங் தெரிவித்தார்.
இந்தக் கிராமத்து மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு குவா மூசாங் நகருக்கு மட்டுமே செல்ல முடியும், தற்போது பிரதான பாதை துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.








