Apr 8, 2026
Thisaigal NewsYouTube
"டீசல் மானியம் வழங்க மைகாட், மைகாசி முறை? - அரசாங்கம் தீவிரப் பரிசீலனை!"
தற்போதைய செய்திகள்

"டீசல் மானியம் வழங்க மைகாட், மைகாசி முறை? - அரசாங்கம் தீவிரப் பரிசீலனை!"

Share:

மலேசியர்களுக்கு டீசல் மானியம் வழங்குவதற்கு மைகாட் மற்றும் மைகாசிமுறையைப் பயன்படுத்துவது குறித்து நிதி அமைச்சு ஆராய்ந்து வருகிறது. இது குறித்த இறுதி முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பின் முறைப்படி அறிவிக்கப்படும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக்கு பிந்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய டத்தோ ஃபஹ்மி, மானிய விலையிலான டீசல் மற்றும் மீனவர்களின் வருமானத்திற்கு இடையே உள்ள முரண்பாடுகள் குறித்து அமைச்சரவை விவாதித்தது. குறிப்பாகக் கரைக்கடல் மற்றும் ஆழ்கடல் மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய விவசாய, உணவு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

எல்லைப்பக்க பெட்ரோல் நிலையங்களில் கடத்தல் சம்பவங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், அங்கு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது

தவிர உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் மேற்கு ஆசிய மோதல் குறித்து போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக இதுவரை 42 புலனாய்வு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 22 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எரிபொருள் விலை குறித்து தவறான தகவல் பரப்பிய 355 பதிவுகளை நீக்க சமூக ஊடக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று டத்தோ ஃபஹ்மி விவரித்தார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தத்தை மலேசிய அமைச்சரவை வரவேற்றுள்ளது. இருப்பினும், ஹார்முஸ் நீரிணையில் இன்னும் சுமார் 2,000 கப்பல்கள் தேங்கியிருப்பதாலும், எரிபொருள் கட்டமைப்புகள் சேதமடைந்திருப்பதாலும், விநியோகம் சீராக சில மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை ஆகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் விளக்கினார்.

Related News