கோலாலம்பூர், பிப்ரவரி.27-
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான யுடிஎம் மாணவர் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணத்திற்குக் காரணமானதாக, மலேசிய ஆயுதப் படையைச் சேர்ந்த ரிசர்வ் அதிகாரிகள் பயிற்சிப் பிரிவின் 3 பயிற்றுநர்கள் மீது கூட்டாகக் குற்றம் சாட்ட சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவு செய்துள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று பயிற்றுநர்களும் குற்றவியல் சட்டத்தின் 304 ஆவது பிரிவின் கீழ் நோக்கமில்லா மரணத்தை விளைவித்தல் குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்று ஐஜிபி தெரிவித்தார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த மூன்று பயிற்றுநர்கள் இன்று கூரில் உள்ள கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
22 வயதான ஷாம்சுல் ஹாரிஸ், கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி உலு திராம் இராணுவப் போர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்தார்.
தொடக்கத்தில் அவர் வலிப்பு நோயால் இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அவரது உடலில் காயங்கள் மற்றும் காயத் தழும்புகள் இருந்ததைக் கண்ட அவரது தாயார் தனது மகன் தாக்கப்பட்டிருக்கலாம் என்று புகார் அளித்தார்.
தடயவியல் நிபுணர் Siew Sheue Feng நடத்திய இரண்டாவது பிரேதப் பரிசோதனையில், ஷாம்சுல் உயிருடன் இருந்த போது அவரது கழுத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டது உறுதிச் செய்யப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்ட புக்கிட் அமான் போலீசார், கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி இந்த வழக்கை கொலை வழக்காக விசாரிக்குமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்குப் பரிந்துரை செய்தது.








