ஜார்ஜ்டவுன், டிசம்பர்.09-
பினாங்கில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர், கடலில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக அஞ்சப்படுகிறது. இரண்டு சம்பவங்கள், பினாங்கு பாலத்திலும், ஒரு சம்பவம் பட்டவொர்த் கடல் பகுதியிலும் நிகழ்ந்துள்ளன.
முதல் சம்பவம் நேற்று பிற்பகல் 1.41 மணியளவில் பட்டர்வொர்த், Tambatan ( தம்பத்தான்) W3 Dermaga Dalam துறைமுகப் பகுதியில் நிகழ்ந்தது. இதில் யமாஹா மோட்டார் சைக்கிளில் வந்த நபர், கைபேசியைக் கைவிட்டப் பின்னர் கடலில் குதித்துள்ளார் என்று பினாங்கு மாநில தீயணைப்பு மீட்புப்படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
கடலில் விழுந்தவர் 48 வயதுடைய ஆடவர் என்று அடையாளம் கூறப்பட்டது. இரண்டாவது சம்பவம் நேற்று இரவு 8.22 மணிக்கு நிகழ்ந்தது. கையில் ஆயுதம் வைத்திருந்த சந்தேகத்திற்கு இடமான நபர், பிறையை நோக்கிச் செல்லும் பினாங்கு பாலத்தின் 4 ஆவது கிலோமீட்டரில் கடலில் குதித்துள்ளார்.
மூன்றாவது சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்தது. 31 வயதுடைய ஆடவர் ஒருவர் பினாங்கு பாலத்தில் குதித்தது குறித்து வடக்கு தெற்கு நெடுஞ்சாலை வாரியம் தகவல் அளித்ததாக ஜோன் சகூன் பிரான்சிஸ் தெரிவித்தார்.
மூன்று ஆடவர்களையும் தீயணைப்பு, மீட்புப் படையினர் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








