கோலாலம்பூர், டிசம்பர்.16-
கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் ஆப்பிரிக்கக்காரர்களின் ஒன்று கூடும் மையம் என்று கருதப்படும் வர்ததகத் தளங்களில் மலேசிய குடிநுழைவுத்துறை, நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 90 சட்டவிரோதக் குடியேறிகள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் ஆப்பிரிக்கக்காரர்கள் ஆவர். உள்ளூர் மக்களுக்கு ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டு வருவதாகக் கிடைக்கப் பெற்ற புகார்கள் மற்றும் இரண்டு வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கை ஆகியவற்றின் விளைவாக இரவு 9.40 மணியளவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
இந்தச் சோதனையில் குடிநுழைவுத்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 99 அமலாக்க அதிகாரிகளிள் ஆள்பலம் பயன்படுத்தப்பட்டது. மொத்தம் 131 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அந்நிய நாடுகளைச் சேர்ந்த 82 ஆண்கள், 34 பெண்கள் மற்றும் உள்ளூர்வாசிகளான 15 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாக டத்தோ ஸாகாரியா குறிப்பிட்டார்.
இதில் குடிநுழைவுத்துறை தொடர்புடைய பல்வேறு குற்றங்களுக்காக 21 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய 90 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நைஜீரியா, ஏமன், சிரியா, சொமாலியா, Guinea- Bissau, Sierra Leone, லைபீரியா, மாலி, இந்தோனேசியா, மியன்மார், வங்காளதேசம், வியட்னாம், தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று டத்தோ ஸாகாரியா ஓர் அறிக்கையில் விளக்கினார்.








