Oct 8, 2026
Thisaigal NewsYouTube

தாய்லாந்து - கம்போடியா நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாய்லாந்து - கம்போடியா நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்

புத்ராஜெயா, ஜூலை.28-

தாய்லாந்தும், கம்போடியாவும் நிபந்தனையற்ற உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

தாய்லாந்து இடைக்கால பிரதமர் பூம்தாம் வேசாயாசாய் மற்றும் கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணியளவில் புத்ரஜெயாவில் பிரதமர் துறை அலுவலகத்தில் போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

கம்போடியா மற்றும் தாய்லாந்து தலைவர்களுடன் கூட்டாக இணைந்து பேசிய பிரதமர் அன்வார், “கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே மிகவும் நேர்மறையான முன்னேற்றத்தைக் காணும் வகையில் இந்தப் பேச்சு வார்த்தையில் நல்ல முடிவுகளை நாங்கள் கண்டிருக்கிறோம்.” என்று அறிவித்தார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடனும் இணைந்து கம்போடியா, தாய்லாந்து இடையிலான மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண மலேசியா நெருங்கிய தொடர்பில் உள்ளது என்று அன்வார் கூறினார்.

இன்று ஜூலை 28 ஆம் தேதி நள்ளிரவு அமலுக்கு வரும் வகையில் கம்போடியாவும் தாய்லாந்தும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

இது இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்கும், அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்குமான நடவடிக்கையில் முதல் படியாகும் என்றும் அன்வார் கூறினார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை இரு நாடுகளுக்கு இடையில் உள்ள எல்லையில் ஏற்பட்ட கண்ணி வெடித் தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது.

மோதல்களைத் தொடங்கியதற்காக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். 5-வது நாளாக நீடித்த இந்தப் போரில் இரு தரப்பிலும் இதுவரை 35 பேர் உயிரிழந்தனர்.

இரு தரப்பிலும் இரண்டு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →