சிலாங்கூர் மாநிலம் கெப்போங், டேசா அமான் பூரி பகுதியில் நேற்று பிற்பகல் வெறித்தனமாகச் செயல்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் நடத்திய அரிவாள் தாக்குதலில் 26 வயதுடைய போலீஸ்காரரின் வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பிற்பகல் 4 மணியளவில், அப்பகுதி பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
மனநிலை சீரற்ற நிலையில் ஒருவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், சுகாதார அமைச்சுப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டதும், இரண்டு அரிவாள்களுடன் இருந்த சந்தேக நபர் அதிகாரிகளைத் தாக்கியுள்ளார்.
இதில் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ரோந்துப் பிரிவைச் சேர்ந்த 26 வயதுடைய அதிகாரி ஒருவரின் வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டதுடன், தலை மற்றும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.
மேலும், சில தீயணைப்பு வீரர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
தாக்குதலுக்குப் பின்னர் தப்பியோடிய சந்தேக நபர், இரவு 8 மணியளவில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரைக் கைது செய்ய முயன்றபோது மீண்டும் போலீசாரை அரிவாளால் தாக்கியதால், போலீசார் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
இதில் காயமடைந்த சந்தேக நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையில், காயமடைந்த போலீஸ்காரர் முதலில் செலாயாங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் துண்டிக்கப்பட்ட வலது கையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது அவர் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.








