கெப்போங் பகுதியில் பணியில் இருந்த போலீஸ்காரர் மீது வெளிநாட்டவர் நடத்திய கொடூரத் தாக்குதலைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த போலீஸ்காரர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுவதற்காகப் பொறுப்பேற்றுள்ள அமலாக்கத் துறையினரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உட்பட அனைத்து வகையான குற்றச்செயல்களும் வன்முறைகளும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என அன்வார் தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் பணியில் ஈடுபடும் அமலாக்க அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.








