Nov 12, 2026
Thisaigal NewsYouTube

இரண்டாவது வீட்டைப் பயன்படுத்தும் நஜிப்பின் கோரிக்கை நிராகரிப்பு: குடும்பத்தினருடன் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டாவது வீட்டைப் பயன்படுத்தும் நஜிப்பின் கோரிக்கை நிராகரிப்பு: குடும்பத்தினருடன் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக், வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்காக இரண்டாவது வீட்டையும் கூடுதல் இடமாகப் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தார்.

ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

வீட்டுக் காவலுக்காக இரண்டாவது வீட்டையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என நஜிப் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை சமர்ப்பித்திருந்ததாக குறிப்பிட்ட சைஃபுடின், கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்தின் முடிவின்படி, கோலாலம்பூரில் உள்ள லங்காக் டூத்தா பகுதியில் அமைந்துள்ள ஒரே ஒரு வீட்டில் மட்டுமே அவர் வீட்டுக் காவலில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நஜிப் வீட்டுக் காவலில் இருக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் அவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு குறித்து பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைஸான் கையாட் எழுப்பிய கேள்விக்கு சைஃபுடின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அதேவேளையில், வீட்டுக் காவலில் உள்ள நஜிப் அவரது குடும்பத்தினருடன் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் நான்கு வகையான நிபந்தனைகளை விதித்துள்ளதாகக் குறிப்பிட்ட சைஃபுடின், அவை வசிப்பிடம் மற்றும் யாருடன் வசிக்கலாம் என்பதற்கான கட்டுப்பாடுகள், நடமாட்டம் மற்றும் பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடுகள், தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள், கட்டாய மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தத் திட்டங்களில் பங்கேற்பது உள்ளிட்டவைகள் எனத் தெரிவித்தார்.

அதன்படி, நஜிப் தமது மனைவிகள், பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரக்குழந்தைகள் தவிர வேறு யாருடனும் வசிக்க அனுமதியில்லை.

மற்றவர்களுடன் வசிக்க வேண்டுமானால் முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். அதேபோல், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பார்வையாளர்களைச் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சைஃபுடின் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →