முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்து அறிவிப்பு நோட்டீஸ் பெறுவதற்காக எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வரவழைத்தது அதிகாரத் தவறான பயன்பாடு என்று மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர் P. வேதமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்
எஸ்பிஆர்எம் சட்டத்தின் 36ஆவது பிரிவு, சொத்து அறிவிப்புக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு கோருவதற்கு மட்டுமே அதிகாரம் அளிப்பதாகவும், நோட்டீஸ் வழங்குவதற்காக ஒருவரை கட்டாயமாக வரவழைக்க அதிகாரம் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
சரவணன், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இன்று புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் சென்று நோட்டீஸைப் பெற்றனர். இதில் 12 வயது மகனும் வரவழைக்கப்பட்டதற்கு சரவணன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனிடையே, சரவணன், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் தங்களது சொத்துகளை அறிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் தலைவர் அப்துல் ஹாலிம் அமான் தெரிவித்திருந்தார்.








