குவாந்தான், டிசம்பர்.27-
கேமரன்மலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள ரயில் திட்டம் குறித்து பரிசீலிப்பதற்கு பகாங் மாநில அரசாங்கம் தயாராக இருப்பதாக அதன் மந்திரி பெசார் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
எனினும் கேமரன்மலையில், தானா ராத்தா (Tanah Rata), பிரிஞ்சாங் (Brinchang) மற்றும் புளூ வேலி (Blue Valley) ஆகிய இடங்களை இணைக்கும் வகையில் ரயில் பாதை அமைப்பது குறித்து இதுவரை மாநில அரசுக்கு எந்தவோர் அதிகாரப்பூர்வ முன்மொழிவும் வரவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அத்தகைய திட்டம் எதிர்காலத்தில் முன்வைக்கப்பட்டால், அது அப்பகுதி மக்களுக்குப் பயனுள்ளதாகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் இருந்தால், அதனை ஆய்வு செய்ய மாநில அரசு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது கேமரன்மலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக இந்த ரயில் திட்டம் குறித்த வதந்திகள் பரவி வரும் நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மூலம் பொதுமக்களுக்கு வசதி கிடைக்குமானால் அதை நிராகரிக்க மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.








