மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், ஈரானின் ஹார்முஸ் நீரிணை வழியாக மலேசியாவிற்குச் சொந்தமான முதல் எண்ணெய் கப்பல் பாதுகாப்பாகக் கடந்து சென்றுள்ளது.
இது குறித்து மலேசியாவிலுள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், "இஸ்லாமியக் குடியரசான ஈரான் தனது நண்பர்களை ஒருபோதும் மறக்காது என்று நாங்கள் ஏற்கனவே கூறியிருந்தோம்; அதன் அடிப்படையில் முதல் மலேசியக் கப்பல் ஹார்முஸ் நீரிணையை கடந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளது.
பெட்ரோனாஸ் நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட 'ஓஷன் தண்டர்' என்ற இந்த எண்ணெய்க் கப்பல், ஈராக் கச்சா எண்ணெயைச் சுமந்து கொண்டு ஜோகூர், பெங்கெராங் நோக்கிப் பயணிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஈரான் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மலேசியக் கப்பல்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோனாஸ், MISC உள்ளிட்ட மலேசிய நிறுவனங்களுடன் தொடர்புடைய மேலும் ஏழு கப்பல்கள் இந்த முக்கிய கடல்வழிப் பாதையைப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








