மலாக்கா, அக்டோபர்.15-
ஒரு வங்காளப் பிரஜை, தனது சக நாட்டவரை மிகக் கொடூரமாக வெட்டிக் கொன்ற பின்னர் வீட்டில் காற்றாடியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்திற்கு பெண் விவகாரமே காரணமாகும் என்று மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
மலாக்கா, டுரியான் துங்கால், தாமான் செம்பாக்கா 2 இல் நேற்று இரவு 7 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 42 வயதுடைய வங்காளதேசப் பிரஜை, உடலில் 21 இடங்களில் ஆழமான வெட்டுக் காயங்களுடன் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த வேளையில் அவரை வெட்டிக் கொன்றதாக நம்பப்படும் ம் 31 வயதுடைய வங்காளதேசப் பிரஜை, வீட்டின் கதவை தாளிட்டுக் கொண்டு, வரவேற்பு அறையின் காற்றாடியில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக டத்தோ ஸுல்கைரி குறிப்பிட்டார்.
ஓர் இந்தோனேசியரான தனது மனைவி, சக நாட்டவருடன் அந்தரங்க தொடர்பில் இருப்பதாகக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, அந்த நபர், சக நாட்டவரை வெட்டிக் கொன்ற பின்னர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது, விசாரணையில் தெரிய வந்தது என்று அவர் மேலும் கூறினார்.








