Dec 4, 2025
Thisaigal NewsYouTube
வீட்டுடைமை மேம்பாட்டுத் திட்டம்: தொழிலாளர்களின் பெயர்ப் பட்டியலை வழங்குமாறு தொழிற்சங்கத்திற்குக் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

வீட்டுடைமை மேம்பாட்டுத் திட்டம்: தொழிலாளர்களின் பெயர்ப் பட்டியலை வழங்குமாறு தொழிற்சங்கத்திற்குக் கோரிக்கை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-

இந்திய சமூகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்காக அரசாங்கம் பத்து மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கு பெற தகுதி உள்ள தோட்டத் தொழிலாளர்களின் பெயர்ப் பட்டியலை வழங்குமாறு தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறைத் துணையமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் அலுவலகத்திலிருந்து கடிதம் பெற்று இருப்பதை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் உறுதிப்படுத்தினார்.

தோட்டத் தொழில் துறையில் பணியாற்றும் இந்தியர்களுக்கு உதவும் பொருட்டு ஓன்-ஓஃப் One-Off முறையிலான வீட்டுடைமை உதவித் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்தத் திட்டத்திற்காக 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தத் திட்டத்தை மித்ரா எனப்படும் இந்திய சமூக உருமாற்ற அமைப்பும் பிரதமர் துறையின் செயலாக்க ஒருங்கிணைப்புத் துறையும் இணைந்து செயல்படுத்தவுள்ளன.

இது தொடர்பாக, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துணை அமைச்சரின் அலுவலகத்தில் துணை அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலனுடன் ஒரு விளக்கமளிப்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தைப் பிரதிநிதித்து சிலாங்கூர் மாநிலக் கிளைச் செயலாளர் வை.தாமசேகரன் கலந்து கொண்டார்.

தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கீழ் இயங்கும் இந்தியத் தொழிலாளர்களின் விவரங்களைச் சேகரித்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் தலைமையில் செயல்படும் தொழிற்சங்கத்தின் கீழ் உள்ள இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் முழுமையான விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக தாமசேகரன் தெரிவித்தார்.

Related News