கோலாலம்பூர், ஜூலை.16-
கோலாலம்பூர், டேசா பண்டானில் இன்று காலை 11 மணியளவில் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்ட கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகளைப் பாராங்கை ஆயுதமாகக் கொண்டு அச்சுறுத்தியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.
டேசா பண்டானில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட அங்காடிக் கடைகளை உடைப்பதற்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட், சிலாங்கூர் குடிநீர் நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள், நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது, திடீரென்று பாராங்குடன் தோன்றிய 43 வயது நபர் ஒருவர், மிரட்டும் தோரணையில் செயல்பட்ட போது, அமலாக்க அதிகாரிகளுக்கும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அமலாக்க அதிகாரிகளை அச்சுறுத்தியதாக நம்பப்படும் நபரிடமிருந்து பாராங் பறிக்கப்பட்டு, அவரைப் போலீசார் கைது செய்ததாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த நபர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








