புக்கிட் மெர்தாஜாம், நவம்பர்.27-
தனக்கு பரிமாறப்பட்ட உணவு ருசியாக இல்லை என்று கூறி உணவகத்தின் சமையல்காரப் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரு மியன்மார் பிரஜைக்கு எதிரான கொலை வழக்கு விசாரணையை புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
30 வயது Ayecho என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட அந்த மியன்மார் பிரஜை, தனக்கு மலாய் அவ்வளவாகத் தெரியாது என்றும் மொழிப்பெயர்ப்பாளர் உதவி வேண்டும் என்றும் கோரியதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் ரொஷாயாத்தி ரடெல்லா, வழக்கை ஒத்திவைக்க அனுமதி அளித்தார்.
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி இரவு, புக்கிட் மெர்தாஜாம், லோரோங் புக்கிட் ஜுருவில் உள்ள தாய்லாந்து உணவு பாணியிலான ஓர் உணவகத்தில் 40 வயது மதிக்கத்தக்க மியன்மார் நாட்டைச் சேர்ந்த சமையல்காரப் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக அந்த நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








