Jun 22, 2026
Thisaigal NewsYouTube
வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியா வருகை / இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை
தற்போதைய செய்திகள்

வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியா வருகை / இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தை

Share:

மலேசியா மற்றும் வங்காள தேசம் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர நலன்கள் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் மலேசியாவிற்கு இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணமானது, கடந்த 2026-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், பிரதமராகப் பதவியேற்ற பின்னர் தாரிக் ரஹ்மான் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அதிகாரப்பூர்வப் பயணமாகும்.

இந்நிலையில், நேற்று இரவு 8.33 மணியளவில் வர்த்தக விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் தாரிக் ரஹ்மான், அவரது மனைவி டாக்டர் சுபைதா ரஹ்மான், மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டாக்டர் கலிலுர் ரஹ்மான் ஆகியோருக்கு கேஎல்ஐஏ புங்கா ராயா வளாகத்தில், கேப்டன் முகமது மஸ்ரூர் ஹிதாயத் மஸ்ரி தலைமையில், ராயல் ரேஞ்சர் முதல் படைப் பிரிவின் மரியாதை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரை அதிகாரப்பூர்வமாக வரவேற்றதோடு, இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.

பின்னர், மேஜர் நூர் அகமத் ஜைம் ஜஹாரி தலைமையிலான முதல் ராயல் ரேஞ்சர் படைப்பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மற்றும் 103 வீரர்களின் கௌரவ அணிவகுப்பை தாரிக் ரஹ்மான் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமத் ஜாஹித் ஹமிடி, வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதனையடுத்து, பிரதமர் அன்வாருடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பெர்டானா புத்ரா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையிலான, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, தொழில்வளம், விவசாயம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

Related News