Jun 22, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் கூட்டுத் திட்ட நிறுவன விவகாரம்: வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய இந்திய நீதிமன்றம் அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் கூட்டுத் திட்ட நிறுவன விவகாரம்: வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய இந்திய நீதிமன்றம் அறிவுறுத்தல்

Share:

இந்தியாவில் செயல்பட்டு வரும் எல் & டபிள்யூ கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாக முறைகேடுகள், லஞ்சப் பரிவர்த்தனைகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த லீ கிம் தா கட்டுமான நிறுவனம் தொடர்ந்திருந்த வழக்கை, உரிய நீதிமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யுமாறு இந்தியாவின் பெங்களூரு வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகார வரம்பு இல்லை என்ற எதிர் தரப்பு வாதத்தைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, வோ ஹப் நிறுவனத்தின் தலைவர் கிம் யாங் மற்றும் இயக்குநர் யுஜின் மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவும் நீக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, இந்தியாவில் கேபிட்டலாண்ட் மற்றும் மேப்பிள்ட்ரீ நிறுவனங்களுடன் தொடர்புடைய பெரிய கட்டுமானத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எல் & டபிள்யூ கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தை மையமாகக் கொண்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டு புனே திட்டம் தொடர்பாக கேபிட்டலாண்ட் ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சுயாதீன தணிக்கை மேற்கொள்ளப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், போலி அல்லது இரட்டை விலைப்பட்டியல்கள் மூலம் நிறுவன நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூத்த நிர்வாக அதிகாரி ஒருவருக்கு எதிராக குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Related News