வளர்ச்சித் திட்டங்களுக்காக சாலை விரிவாக்கப் பணிகள் அவசியம் என்றாலும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களின் உரிமைகளையும் மதித்து பாதுகாக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாபாராய்டு வலியுறுத்தியுள்ளார்.
சிலாங்கூர் , குவாங் பகுதியில் சாலை சந்திப்பு விரிவாக்கத் திட்டத்தால் பாதிக்கப்படும் சில ஆலயங்களை, நிர்ணயிக்கப்பட்ட முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலப் பகுதிக்கு மாற்ற அனைத்து தரப்பினருக்கும் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பாபாராய்டு குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக, 1.08 ஏக்கர் புதிய நிலம் உட்பட மாற்று இடத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆலயப் பொறுப்பாளர்கள்,சைம் டார்பி, குவாங் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ரஃபிக், மாநில ஆட்சிக்குழு அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்தத் தீர்வு எட்டப்பட்டுள்ளதாக பாபாராய்டு சுட்டிக்காட்டினார்.
இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் வாய்மொழி உடன்பாட்டுடன் நிற்காமல், ஆலய நிர்வாகப் பிரதிநிதிகள் ஒப்புதல் மற்றும் உறுதிமொழிக் கடிதங்களிலும் கையெழுத்திட்டுள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் வளர்ச்சி தொடரப்படும் அதேவேளையில் எந்த சமூகத்தையும் புறக்கணிக்காமல், பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிதல் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே சிலாங்கூர் அரசின் அணுகுமுறை என பாபாராய்டு வலியுறுத்தினார்.








