Jan 12, 2026
Thisaigal NewsYouTube
முதற்கட்ட ஆதாரங்கள் இருந்தும் ஸாஹிட் வழக்கு கைவிடப்பட்டது ஏன்? காரணங்களை உடைத்தார் சட்டத்துறை தலைவர்
தற்போதைய செய்திகள்

முதற்கட்ட ஆதாரங்கள் இருந்தும் ஸாஹிட் வழக்கு கைவிடப்பட்டது ஏன்? காரணங்களை உடைத்தார் சட்டத்துறை தலைவர்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.12-

துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட 47 ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கை "மேல் நடவடிக்கை இல்லை என்று ஏன் வகைப்படுத்தப்பட்டது என்பதற்கான காரணங்களை சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுகி மொக்தார் இன்று விளக்கினார்.

ஸாஹிட் ஹமிடியின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த 6 முறையீடுகளை ஆய்வு செய்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், வழக்கில் இருந்த ஏராளமான பணப் பரிமாற்றத் தடயங்கள் வழக்கின் வலிமையைக் குறைத்து விட்டதாகவும் முஹமட் டுசுகி தெளிவுபடுத்தினார்.

வழக்கை மீண்டும் விரிவாக ஆய்வு செய்த போது, அதில் ஏராளமான பணப் பரிமாற்றத் தடயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை வழக்கின் தன்மையை 'நீர்த்துப் போகச்' செய்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஸாஹிட் ஹமிடியின் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த 6 முறையீடுகளை ஆய்வு செய்ததில், உண்மைத் தன்மைகள் மற்றும் சட்டம் சார்ந்த சிக்கல்கள் எழுப்பப்பட்டன. இதனால் ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேல் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார் .

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், வழக்கில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாகக் கூறி, ஸாஹிட் ஹமிடியை தற்காப்பு வாதம் புரிய அழைத்திருந்தாலும் அதனையும் தாண்டி வழக்கு வலுவாக இருப்பதாகக் கருதுவது தவறானது என்றார் முஹமட் டுசுகி.

உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட சில வழக்குகள் கூட, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட உதாரணங்களை சட்டத்துறை தலைவர் சுட்டிக் காட்டினார்.

இந்த முடிவு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் நாட்டின் தலைமை வழக்கறிஞர் என்ற முறையில் சட்டத்துறை தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது என்பதையும் முஹமட் டுசுகி வலியுறுத்தினார்.

Related News