புத்ராஜெயா, பிப்ரவரி.25-
நாட்டின் எல்லை நுழைவாயிலில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் கமாண்டர், இலக்கு வைக்கப்பட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாகப் பார்ப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சைஃபுடின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவத்தில் ஏகேபிஎஸ் கமாண்டர் காயமின்றி உயிர் தப்பியதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அரச மலேசிய போலீஸ் படை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் பாதுகாப்பு நிலைமை தற்போதைக்குக் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு செயலுக்கும் அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது. இதில் தொடர்புடைய தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.








