சிரம்பான், நவம்பர்.13-
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நண்பர்களைச் சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.
29 வயது கே. கவிவர்மன், 30 வயது என். கோபிநாத் மற்றும் 32 வயது எஸ். டினேஸ் குமார் ஆகியோரே விடுதலை செய்யப்பட்ட 3 நபர்கள் ஆவர்.
அந்த மூன்று நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தவறி விட்டதாக நீதிபதி ரொஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று நபர்களையும், எதிர்வாதம் புரிய அழைக்கப்படாமலேயே நீதிமன்றம் விடுதலை செய்வதாக ரொஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
கவிவர்மன், கோபிநாத் மற்றும் டினேஸ் குமார் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை 3 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் சிரம்பான் அருகில் டத்தாரான் செண்ட்ரலில் 227 கிராம் எடை கொண்ட போதைப் பொருளைக் கடத்தியாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.
கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.








