தீபாவளியை முன்னிட்டு தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 385 மாணவர்களுக்கு 4 லட்சத்து 49 ஆயிரத்து 600 ரிங்கிட் கல்வி உதவித் தொகையை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சரும், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஙா கோர் மிங் வழங்கினார்.

வரும் ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது மாணவர்களுக்கு தலா 200 ரிங்கிட் கல்வி உதவியும் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
தெலுக் இந்தான் ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ங்கா கோர் மிங், கல்வியே நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்றும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும் பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கும் அரசாங்கம் தொடர்ந்து உதவும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், தீபாவளியை முன்னிட்டு தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரம் ரிங்கிட் மடானி அன்பளிப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலயத்துக்கு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 492 ரிங்கிட்டும், தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்துக்கு 2 லட்சத்து 13 ஆயிரத்து 20 ரிங்கிட்டும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேராக் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினரும், தெலுக் இந்தான் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங், ஆலயப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.








