ஈப்போ, செப்டம்பர்.29-
ஓராங் அஸ்லி பெண் ஒருவரை மானபங்கம் செய்ததுடன் அவருக்கு காயம் விளைவித்ததாக போலீஸ்காரர் ஒருவர், பேரா, பாரிட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
28 வயது கரிசா காரிம் என்ற அந்த போலீஸ்காரர், மாஜிஸ்திரேட் நூருல் இஸாலினா ரஜாய் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அரச மலேசிய போலீஸ் படையின் பொது செயலாக்கத்திற்கான காலாட் பிரிவின் உலு கிந்தா நிலையத்தைச் சேர்ந்த அந்த போலீஸ்காரர், 21 வயது ஓராங் அஸ்லி பெண்ணுக்கு மானபங்கம் விளைவித்து, அவரைக் காயப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில் பேரா தெங்கா, கம்போங் காஜா, கம்போங் அஸ்லி செண்டெரோங் கெலுபி என்ற பூர்வகுடி கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் அந்த போலீஸ்காரர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








