கோலாலம்பூர், டிசம்பர்.11-
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள போலீஸ்காரர்களை இதுவரை விசாரணை செய்யப்படாதது குறித்து அந்த மூன்று இளைஞர்கள் குடும்பத்தினர் சார்பாக ஆஜராகியுள்ள வழக்கறிஞர்கள், போலீஸ் துறையைச் சாடியுள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மூவரும், மருத்துவ அதிகாரிகள் நால்வரும் விசாரணை செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் துறை அறிவித்துள்ளது. ஆனால், இந்தக் குற்றத்தை இழைத்துள்ளதாகக் கூறப்படும் போலீஸ் தரப்பினரை, இதுவரை விசாரணை செய்யாமல் இருப்பது குறித்து வழக்கறிஞர்கள் ராஜேஸ் நாகராஜன் மற்றும் Sachpreetraj Singh கேள்வி எழுப்பினர்.
சம்பந்தரப்பட்ட போலீஸ்கார்கள் இன்னும் விசாரணை செய்யப்படாமல் அலட்சியம் காட்டப்படுவதானது, ஒட்டுமொத்த விசாரணை நடைமுறைகளைப் பாதிக்கக்கூடிய தொழில்நுட்ப ரீதியான பலவீனமாகும் மற்றும் இயலாமையாகும் என்று அவ்விரு வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர்.
எந்தவொரு விசாரணையிலும் பலவந்தம் பயன்படுத்தப்பட்டு இருக்குமானால் அத்தகைய குற்றத்தை இழைத்த போலீஸ்காரர்கள்தான் முதலில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 7 தனிநபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் நேற்று அறிவித்தது தொடர்பில் அவ்விரு வழக்கறிஞர்களும் எதிர்வினையாற்றியுள்ளனர்.








