ஶ்ரீ அலாம், ஜனவரி.14-
சரவாக், ஶ்ரீ அமான் மாவட்டத்தில் தாமான் முத்தியாரா வீடமைப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலைமையாசிரியர் ஒருவரும், தாதியரான அவரின் மனைவியும் கொலையுண்ட நிலையில் இறந்து கிடந்தது, இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தத் தம்பதியரின் மகன், காலையில் பள்ளிக்கு புறப்பட ஆயத்தமான போது வீட்டின் படுக்கை அறையில் தனது பெற்றோர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில் பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.
லுபோக் அந்து மாவட்டத்தில் உள்ள SK Sbangki தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த 45 வயது Andy Roy Junran, ஶ்ரீ அமான் மருத்துவமனையில் ஒரு தாதியரான அவரின் 44 மனைவி ஆகியோரே இந்தச் சம்பவத்தில் இறந்தவர்கள் ஆவர் என்று அடையாளம் கூறப்பட்டது.
அவர்களின் உடல்களில் பலத்த காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் தகவலின்படி அந்தத் தம்பதியர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சரவா மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ முஹமட் ஸைனால் அப்துல்லா கூறுகையில் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இது குறித்து தாங்கள் தீவிர விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்தார்.








