செர்டாங், டிசம்பர்.07-
பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகில் கட்டப்படும் புதிய வீட்டுக் கட்டுமானத் திட்டங்களில் வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வீட்டு வசதி அமைச்சிற்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் பரிந்துரைத்துள்ளார். ஒரு வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு வாகன நிறுத்துமிடம் கட்ட வேண்டும் என்ற கட்டாய விதிமுறையே வீட்டு விலைகள் உயரக் காரணமாக இருப்பதால், இந்தப் பரிந்துரையைச் செய்ததாக அமைச்சர் லோக் கூறினார்.
LRT அல்லது MRT போன்ற போக்குவரத்துச் சேவை நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் அவர்கள் கார் வைத்திருப்பதற்கான செலவு குறையும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தக் கருத்து குறிப்பாக இளைஞர்களை இலக்காகக் கொண்டது என்றும், பொதுப் போக்குவரத்தைச் சார்ந்திருக்கும் வாழ்க்கை முறைக்கு மாறுவதன் மூலம் நீண்ட காலத்திற்குச் செலவுகளைக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.








