கோலாலம்பூர் மாநகரில் காலி இடங்களை, தங்களுக்கு சொந்தமான இடத்தைப் போன்று வளைத்து, வேலி அமைத்து, சட்டவிரோதமாக வாகன நிறுத்தும் இடங்களை உருவாக்கிக்கொண்டதாக மூன்று இந்தியப் பிரஜைகள் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
இந்த மூன்று இந்திய பிரஜைகளும் கோலாலம்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். ஜாலான் வால்டர் கார்னியர்,புக்கிட் பிந்தாங் மற்றும் திதிவங்சா ஜாலான் லூமுட் ஆகிய பகுதிகளில் இவர்கள் சட்டவிரோதமாக கார் நிறுத்தும் இடங்களை வழிநடத்தி வந்துள்ளனர் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாநகர் மன்றம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இந்த மூவரும் பிடிபட்டுள்ளனர். இந்த மூவரில் ஒருவருக்கு ஒரு வாரம் சிறை,இன்னொருவருக்கு 600 வெள்ளி அபராதம், மற்றொரு நபருக்கு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவர்களை தவிர சாலை வளைவு, ஐந்தடி பாதைகள் மற்றும் காலியான இடங்களில் வாகன நிறுத்தும் இடங்களை அமைத்துக்கொண்டு சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இதர கார் நிறுத்தும் இடங்களின் பராமரிப்பாளர்ளையும் மாநகர் மன்ற்ம அடையாளம் கண்டுள்ளதாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.








