சுங்கை பட்டாணி, நவம்பர்.13-
காருக்குள் தனது கணவனின் அடியைத் தாங்கிக் கொள்ள சக்தியில்லாமல் மனைவி, காரின் கதவைத் திறந்து கொண்டு சாலையில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை, சுங்கை பட்டாணி, Jalan Lencongan Timur சாலையில் நிகழ்ந்தது. சென்று கொண்டிருந்த காரிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காரிலிருந்து குதிக்கத் தாம் முடிவு செய்ததாக சம்பந்தப்பட்ட பெண், பின்னர் போலீசில் புகார் செய்ததாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
முன்னதாக, மாலை 6 மணியளவில் சுங்கை லாலாங்கில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் தனது காரில் இருந்த போது, அங்கே வந்த தனது கணவர், காரிலிருந்து தன்னை தரதரவென்று இழுத்து, அவரது காருக்குக் கொண்டுச் சென்றதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
கார் புறப்படத் தொடங்கிய போது காரில் இருந்தவாறு இருவருக்கும் இடையில் கைச்சண்டை ஏற்பட்டதாகவும் அப்போது தனது கணவர் தன்னைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கி விட்டதாக அந்தப் பெண் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு ஏதுவாக அந்தப் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








