பத்துகேவ்ஸ் வட்டாரத்தில் இந்தியர்களின் பாரம்பரிய கிராமமான இண்டியன் செட்டில்மெண்ட்டில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் தங்களை, தற்போதைய குடியிருப்புப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கும் சதிமுயற்சியில் உள்ளூர் இந்தியர்களின் குடியிருப்பாளர் சங்கம் ஈடுபட்டுள்ளதாக கூறி, தங்களுக்கு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடீன் ஷாரி உதவ வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள 26 இந்திய குடும்பங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் தொடங்கிய 26 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 70 பேர், தங்களை இண்டியன் செட்டில்மெண்ட்டிலிருந்து விரட்டி, பத்து ஆராங்கில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள ஓர் இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும்படி நெருக்குதல் அளிக்கப்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பத்துகேவ்ஸ் இண்டியன் செட்டில்மெண்ட்டில் உள்ள இந்தியர்களின் குடியிருப்பாளர் சங்கமே இந்த சதிநாசவேலைக்கு துணை நின்று இருப்பதாக அவர்கள் கடுமையாக சாடினர்.

இண்டியன் செட்டில்மெண்ட்டில் சாலை அபிவிருத்தி திட்டம் என்றும், சீரமைப்புத்திட்டம் என்று உள்ளூர் இந்திய குடியிருப்பாளர் சங்கமே ஒரு திட்டத்தை முன்வைத்து, அதற்கான அங்கீகாரத்தை வி.எஸ். மணியம் மற்றும் அவர் தலைமையிலாான ஒரு குழுவினர் ஈடுபட்டு இருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ரமேஷ் மற்றும் ஈஸ்வரி தலைமையிலான மலேசிய தமிழர் முன்னேற்றக்கழகத்தின் முன்னெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த அமைதி மறியல் நடவடிக்கையில், தாங்கள் நகர்ப்புறத்திலிருந்து மீண்டும் காட்டுக்குத் தள்ளப்படுவதாக கூறி, குடியிருப்பாளர் சங்கம், சிலாங்கூர் மந்திரி பெசார் மற்றும் கோம்பாக் நில அலுவலகம் ஆகிய தரப்பினருக்கு எதிராக பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதகைகளை ஏந்திய வண்ணம் அவர்கள் இந்த அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

முதியோர்கள், பணி ஓய்வுப்பெற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என்ற பலர் தங்கள் அதிருப்தியை தெரிவித்த வண்ணம், தங்களை மறு குடியேற்றம் செய்யும் திட்டத்தை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
தற்போது தங்கள் குடியிருக்கும் பகுதி 1956 ஆம் ஆண்டு வெள்ளைக்காரர்களால் வழங்கப்பட்ட நிலமாகும். ஈயக்குட்டைகள் நிறைந்த அப்பகுதியில் மண் நிரப்பட்டப்பின்னர் தங்களுக்கு அந்த நிலங்கள் லாட் ரீதியாக பிரித்துக்கொடுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
பத்துகேவ்ஸ் இண்டியன் செட்டில்மெண்ட்டில் தங்கள் குடியிருப்பை மேம்படுத்திக்கொள்வதற்கு ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வாழ்சேமிப்புப் பணத்தை முழுமையாக பயன்படுத்தியுள்ளனர்.

பணி ஓய்வுப்பெற்ற நிலையில் தங்களின் கைகளில் எதுவும் இல்லாத நிலையில் தங்களின் இந்த கிராமத்திற்கு அறவே தொடர்பே இல்லாத வெளியாட்களுக்கு மிக ரகசியமான முறையில் நிலப்பட்டா ஒதுக்கி தரப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் பத்து ஆராங்கில் வனவிலங்கு வாழும் ஒரு காட்டுப்பகுதியில் தங்களுக்கு நிலம் ஒதுக்கி தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த காட்டுப்பகுதியில் மக்கள் குடியிருக்க முடியாது. எந்தவொரு போக்குவரத்து வசதியோ, சாலை வசதியோ எதுவும் இல்லை. அது வனவிலங்கு நடமாடும் பகுதியாகும்.
அந்த புதிய இடத்திற்கு தாங்கள் இடமாறி செல்லப் போவதில்லை. காரணம், 45 ஆண்டு காலமாக தாங்கள் குடியிருந்த பகுதியிலிருந்து தங்களை விரட்டி அடிப்பதற்கான அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து சிலாங்கூர் மந்திரி பெசார் இதுவரையில் பதில் சொல்லாதது தங்களுக்கு விந்ததையாக உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
காரணம், தங்கள் குடியிருப்புப்பகுதியானாது மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். தாங்கள் குடியிருக்கின்ற இந்த பகுதி, மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கோம்பாக் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
சிலாங்கூர் மந்திரி பெசாராக பெரும் அதிகாரத்துடன் இருக்கும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியினால் பத்துகேவ்ஸ் இண்டியன் செட்டில்மெண்டில் உள்ள 26 குடும்பங்களின் பிரச்னையை தீர்க்க முடியாதா? அப்படி தீர்க்க முடியாத அளவிற்கு அப்படியென்ன சிக்கலை அவர் கொண்டுள்ளார் ? என்று பாதிக்கப்பட்ட 26 இந்திய குடும்பங்கள் கேள்வி எழுப்பினர்.
அடையாளம் காணப்பட்ட நிலம், வனவிலங்குகள் நடமாடும் காட்டுப்பகுதி என்றாலும் அந்த நிலத்திற்கு நிலப்பட்டா வழங்கக்கூடிய பாரம் 5 எதுவும் வழங்கப்படவில்லை. நிலத்தின் அளவு, லாட் எண், எதுவும் இல்லாமல் தங்களை வேண்டுமென்றே வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த நாடகம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.








