முன்னாள் தபுங் ஹாஜி தலைவர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் கீழ், நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரான அவரிடம், காலை 9 மணியளவில் நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளதாக நீதிமன்ற மின்னணு பதிவுகள் தெரிவிக்கின்றன.
தபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, அப்துல் அஸீஸ் மற்றும் முன்னாள் கருவூலத் தலைமைச் செயலாளர் ஒருவர் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 23(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2014 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான தபுங் ஹாஜி நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் சொத்துகள் குறித்து விசாரித்த ஆர்சிஐ, நஷ்டம் ஏற்பட்ட முதலீடுகள் பதிவு செய்யப்படாமல் இருந்ததையும், வருடாந்திர லாபப் பங்கீட்டை நியாயப்படுத்த கணக்கியல் முறைகேடு பயன்படுத்தப்பட்டதையும் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.








