சரவாக் மாநிலம் லோங் லெல்லாங் STOLport அருகே இன்று பிற்பகல் சுகாதார அமைச்சின் பறக்கும் மருத்துவ சேவை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 5 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களின் தற்போதைய நிலைமை இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மிரியில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டரில் ஒரு மருத்துவ அதிகாரி, ஒரு மருத்துவ உதவியாளர் மற்றும் 2 செவிலியர்கள் என 4 சுகாதாரப் பணியாளர்கள் அதிகாரப்பூர்வ பணிக்காகச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாலை 3.58 மணிக்கு தகவல் கிடைத்ததாக மலேசிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையமான சிஏஏஎம் (CAAM) தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹெலிகாப்டரில் இருந்தவர்களின் நிலை மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த ஹெலிகாப்டரானது தொலைதூர கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் கெலாபிட் மற்றும் பெனான் சமூகங்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அதிகாரிகள், மீட்புக் குழுவினர் மற்றும் விமானப் போக்குவரத்து அமைப்புகளுடன் இணைந்து தகவல்களைச் சேகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், உறுதிப்படுத்தப்படாத தகவல்களையோ வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சின் கீழ் செயல்படும் விமான விபத்து விசாரணைப் பணியகமான ஏஏஐபி (AAIB) விசாரணை நடத்தவுள்ளது.








