கோலாலம்பூர், செப்டம்பர்.28-
நேற்று சிலங்கூர் மாநிலத்தில் ஒரு பள்ளி வளாகத்தில் உள்ள மூடப்படாத கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து 9 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோரச் சம்பவத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என கியூபெக்ஸ் எனப்படும் பொதுச் சேவை ஊழியர் சங்கக் கூட்டமைப்பு கல்வி அமைச்சை வலியுறுத்தியுள்ளது.
அனைத்துப் பள்ளிகளின் கட்டமைப்புகளையும் பாதுகாப்பையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அதன் தலைவர் அட்னான் மாட், மாணவர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்பது நாட்டின் கடமை எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இது போன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, கல்வி அமைச்சு உடனடியாகப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








