லங்காவி, டிசம்பர்.12-
மதம் மற்றும் இன உணர்வுகளுக்கு வழிவகுக்கும் எந்தவொரு கோரிக்கையும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள தேசிய மொழியான மலாய் மொழியின் நிலையைக் கருத்தில் கொண்டு, அதற்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மலாய் மொழியின் நிலை குறித்து கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கொள்கைகள் முதன்மையாகக் கருத்தில் கொண்டு, அவற்றை ஆதரித்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
அண்மைய காலமாக மொழி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. சிலர் ஆங்கில மொழியை வலியுறுத்த விரும்புகிறார்கள். இன்னும் சிலர் யுஇசி எனப்படும் ஒருங்கிணைந்தத் தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
எனினும் இது மலேசிய நாடாகும். மலாய் மொழி பிரதான தேசிய மொழியாகும். எந்தவொரு மொழியையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் எவரும், தேசிய மொழியான மலாய் மொழியில் அனைத்து மலேசியர்களும் ஆளுமை கொண்டிருப்பதற்கு அதனை அறிவு மொழியாக உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.








