சிலாங்கூரையும், திரெங்கானுவையும் இணைக்கும் கிழக்குக் கரையோர மாநிலங்களுக்கான இசிஆர்எல் ரயில் சேவையில், கோம்பாக்கிலிருந்து கோத்தா பாரு வரையிலான ஒரு வழிப் பயணக் கட்டணம் 125 ரிங்கிட்டில் தொடங்குகிறது என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவு ரயிலுக்கான தொடக்கக் கட்டணம் 147 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணச் சீட்டுகள் நவம்பர் மத்தியில் விற்பனைக்கு வரும் என இசிஆர்எல் ரயில் சேவையை முன்னெடுத்துள்ள பிரதான ரயில் நிறுவனமாக மலேசியா ரேல் லிங்க் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நிலையத்திலும் நின்று செல்லும் ரயிலில் கோம்பாக்கிலிருந்து கோத்தா பாரு சென்றடைய சுமார் ஐந்து மணி நேரமாகும். நான்கு முக்கிய நிலையங்களில் மட்டுமே நிற்கும் விரைவு ரயில் சுமார் நான்கு மணி நேரத்தில் சென்றடையும். கோம்பாக்–கோலா திரெங்கானு வழித்தடத்தில் கட்டணம் முறையே 95, 110 ரிங்கிட்டாகவும், கோம்பாக்–கோத்தாசாஸ் (Kota Sas) வழித்தடத்தில் 60, 68 ரிங்கிட்டாகவும் தொடங்குகிறது.
மேலும், 2 முதல் 12 வயது வரையிலான சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட மலேசிய மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசாங்க ஓய்வூதியதாரர்களுக்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகையும், 13 முதல் 24 வயது வரையிலான மாணவர்களுக்கு 40 விழுக்காடு சலுகையும் வழங்கப்படும். பயண நேரம், தேவை மற்றும் இருக்கைகளின் இருப்பைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.
வர்த்தக ரீதியான இசிஆர்எல் பயணிகள் சேவை வரும் டிசம்பர் மத்தியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.








