முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் மனைவி, காலஞ்சென்ற துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலி அவர்களின் கல்லறைக்கு, அவர் மறைந்து மூன்று வாரங்களில் நாடு முழுவதும் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இது குறித்து அவரது மகனும், பெஜுவாங் கட்சித் தலைவருமான டத்தோ ஶ்ரீ முக்ரிஸ் மகாதீர் கூறுகையில், மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தோனேசியாவின் பலேம்பாங் நகரில் இருந்தும் மக்கள் வருகை புரிவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமது தாயாரை நேரில் சந்தித்திராதவர்கள் கூட மரியாதை செலுத்த வருவதாகவும் முக்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 70 ஆண்டுகளாகத் தன்னுடன் வாழ்ந்த துணையை இழந்து தவிக்கும் தனது தந்தை மகாதீர், கல்லறைக்கு வரும் சமயங்களில் அங்கு திரண்டிருக்கும் மக்களைக் காண்பது அவரது துயரத்தைக் குறைக்க உதவுவதாகவும் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.
தமது தாயார் ஒரு மருத்துவராக, குறிப்பாக கிராமப்புற மக்களுக்காகத் தொடர்ந்து சேவையாற்றியதற்காக, அவர் விட்டுச் சென்ற மகத்தான பங்களிப்புகளையும், மரபையும் மக்கள் இன்றளவும் மதித்துப் போற்றுவதையே இந்தப் பெரும் அஞ்சலி வெளிப்படுத்துவதாகவும் முக்ரிஸ் விவரித்துள்ளார்.








