நாட்டில் புகைமூட்ட பாதிப்பு நிலவும் மாநிலங்களில், அதற்கேற்ப ஹைபிரிட் வோர்க்டே எனப்படும் கலப்புப் பணி முறை கொள்கையைப் பயன்படுத்தி அரசாங்கப் பணிகளைச் சீரமைக்கலாம் என அரசாங்கப் பணியாளர் துறையான பிஎஸ்டி அறிவித்துள்ளது.
இது குறித்து அத்துறையின் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் வான் அஹ்மாட் டாஹ்லான் அப்துல் அஸிஸ் கூறுகையில், அந்தந்த மாநிலங்களில் நிலவும் புகைமூட்ட சூழலுக்கு ஏற்ப, அரசாங்கத் துறைத் தலைவர்கள் எச்பிஎச் கொள்கையின் கீழ் பொருத்தமான பணி முறைகளை நடைமுறைப்படுத்தலாம் என்றார்.
இருப்பினும், ஒவ்வொரு அரசாங்க ஊழியரின் பணிகளும் உரிய முறையில் நிறைவேற்றப்படுவதையும், முக்கிய செயல்திறன் குறியீடுகளான இலக்குகள் எட்டப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கலப்புப் பணி அட்டவணையானது ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய புகைமூட்ட சூழலுக்கும் அது பொருந்தும் என்றும் வான் அஹ்மாட் டாஹ்லான் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்துவது அந்தந்த அரசாங்கத் துறைத் தலைவர்களின் முடிவைப் பொறுத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








