தமது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மா அலியைப் பிரிந்து மூன்று வாரங்கள் கடந்தும், அந்தத் துயரிலிருந்து தம்மால் இன்னும் முழுமையாக மீள முடியவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் மிக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் அலுவலகத்துக்குச் செல்ல முயன்றாலும், அதற்கான வலிமை இன்னும் திரும்பவில்லை என்று கூறிய மகாதீர், தமது 70 ஆண்டுகால வாழ்க்கைத் துணையாக ஹஸ்மாவை இவ்வளவு நீண்ட காலம் தம்முடன் வாழ இறைவன் அனுமதித்ததற்காக நன்றியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மனைவிக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், துயரக் காலத்தில் தமக்கு ஆறுதல் கூறியவர்களுக்குப் பதிலளிக்க முடியாமல் போயிருந்தால் மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
100 வயதான ஹஸ்மா, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி காலமானார். 1956ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினர், கடந்த ஆகஸ்ட் மாதம் தங்களின் 70ஆவது திருமண நாளைக் கொண்டாடியிருந்தனர்.








