1எம்.டி.பி. தொடர்பான கடன்கள் அனைத்தும் முழுமையாகச் செலுத்தி முடிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுவதைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார். நாட்டின் பெரும் கடன் சுமையை அரசாங்கம் இன்னும் நிர்வகிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று நிதி அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய அன்வார், 1எம்.டி.பி. கடன்கள் அனைத்தும் செலுத்தப்பட்டு விட்டதாகக் கூறுவோர் எந்தத் தகவலின் அடிப்படையில் அவ்வாறு தெரிவிக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
கடந்த ஜூலை மாதம், துணை நிதி அமைச்சர் லியூ சின் தோங் வெளியிட்ட தகவலின்படி, 1எம்.டி.பி. தொடர்பான மொத்தக் கடன் பொறுப்புகள் 51.4 பில்லியன் ரிங்கிட்டாகும். இதில் 42.5 பில்லியன் ரிங்கிட் ஏற்கெனவே செலுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பொறுப்புகளை 2039ஆம் ஆண்டு வரை அரசாங்கம் நிர்வகிக்க வேண்டியுள்ளது.
புதிய கடன்களைப் பெறும்போது பொறுப்புடன் செயல்பட்டு, எதிர்காலத் தலைமுறையினர் அதிகக் கடன் சுமையை ஏற்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.








