கோலாலம்பூர், செப்டம்பர்.29-
புடி95 திட்டத்தின் வாயிலாக பெட்ரோல் ரோன் 95 விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது என்ற போதிலும், இதுநாள் வரையில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த பயணிகள், தங்கள் பயண முறையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.
பெட்ரோல் விலை குறைந்து விட்டது என்பதற்காக அவரவர் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தும் போக்குவரத்து முறையைக் காட்டிலும், பொது போக்குவரத்து செலவினத்தைக் குறைக்க வல்லதாகும். நடைமுறைக்கு அதிக பொருந்தக்கூடியதாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பொது போக்குவரத்தில் மாதம் 50 ரிங்கிட் கட்டணம் என்பது நியாயமானதாகும். செளகரியமான பயண முறை, பயண நேரத்தை மீதப்படுத்தக்கூடியதாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பெட்ரோல் விலை குறைவதால், பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த பயணிகள், சொந்த வாகனங்களுக்கு மாறக்கூடுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.








