கூலிம், நவம்பர்.07-
கூலிம் மாவட்ட நகராண்மைக் கழகத்தின் வீட்டு வரிக்கானக் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்ட பரிந்துரைக்கு, கெடா மாநில அரசுக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தை எந்தவொரு தரப்பினரும் அரசியலாக்க வேண்டாம் என்று கூலிம் மாவட்ட நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ ஹாஜி எல்மி யுசோஃப் வலியுறுத்தினார்.

நகராண்மைக் கழகத்தின் சட்டத் திட்டங்கள்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டு வரி உயர்த்தப்பட வேண்டும். ஆனால் கூலிம் மாவட்ட நகராண்மைக் கழகம், கடந்த 1985 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆண்டு வரை ஏறக்குறைய 40 ஆண்டுகள் வீட்டு வரியை உயர்த்தவில்லை என்று என்று டத்தோ எல்மி சுட்டிக் காட்டினார்.

வீட்டு வரி உயர்த்தப்படுவது தொடர்பாக கடந்த செவ்வாய்கிழமை கூலிம் மாவட்ட நகராண்மைக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் டத்தோ எல்மி இதனைத் தெரிவித்தார்.

கெடா மாநிலத்தில் மொத்தம் 12 நகராண்மைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் அலோர் ஸ்டார் மற்றும் கூலிம் ஆகிய இரு மாவட்டங்கள் மட்டுமே வீட்டு வரியை உயர்த்தும் பரிந்துரையை முன்னெடுத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கூலிம் மாவட்டத்திலுள்ள வீடுகள், நிலங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் என 12 பிரிவுகள், வீட்டு வரி உயர்வில் சம்பந்தப்பட்டு இருப்பதையும் அவர் விளக்கினார். இது தொடர்பாக கூலிமில் உள்ள அனைத்து சொத்துடமையாளர்களுக்கும் முன் அறிவிப்பு வழங்கப்படும் என்பதையும் டத்தோ எல்மி தெளிவுபடுத்தினார்.








